Thursday, September 27, 2012

இன அடிப்படையிலான பொருளாதாரக் கொள்கைகளுக்கு விடையளிக்கும் மக்கள் கூட்டணியின் 2013ஆம் ஆண்டுக்கான மாற்று வரவு செலவு திட்டம்!


மக்களின் பொருளாதாரம்; நாட்டின் மேன்மை! என்ற கருப்பொருளை மையமாகக் கொண்ட 2013ஆம் ஆண்டுக்கான மாற்று வரவு செலவு திட்டத்தை (மாற்று பட்ஜெட்) மக்கள் கூட்டணி முன்வைத்துள்ளது. எதிர்வரும் வெள்ளிக்கிழமையன்று 2013ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டத்தை பிரதமர் நஜீப் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யவிருக்கும் வேளையில், இன்று, நாடாளுமன்றத்தில் செய்தியாளர்கள் முன்னிலையில் மக்கள் கூட்டணியின் 2013ஆம் ஆண்டுக்கான மாற்று வரவு செலவு திட்டத்தை எதிர்கட்சி தலைவர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் முன்வைத்தார்.


நமது நாடு புதிய ஒரு பாதைக்கு செல்ல வேண்டிய தருணம் வந்து விட்டது. பூமிபுத்ரா கொள்கைகள், ஒரு சிலரிடம் மட்டுமே செல்வம் கொழிக்க செய்யும் வகையில் தவறாக உபயோகிக்கப்பட்டுள்ளன. ஏழ்மை ஒழிப்பு திட்டங்கள் நிச்சயம் தொடரும், ஆனால் அவை இன அடிப்படையில் இருக்க வேண்டும் என்ற அவசியமில்லை. ஏழ்மை ஒழிப்பு திட்டங்களானவை இன அடிப்படையில் ஏழ்மையை ஒழிப்பதாக இல்லாமல், அனைத்து இன ஏழை மக்களுக்கும் உதவும் நோக்கத்தில் இருக்க வேண்டும்!” என்று செய்தியாளர்களிடம் பேசிய அன்வார் கூறினார்.

பினாங்கு மற்றும் சிலாங்கூர் மாநிலங்களில் சிறுதொழில் கடனுதவித் திட்டம் இன அடிப்படையில் இல்லாமல், அனைவருக்கும் வழங்கப்பட்டது, ஆனால் அவ்வுதவித்திட்டத்தில் பயனடைந்தவர்களில் பெரும்பாலனவர்கள் மலாய்க்காரர்கள் என்பதை சுட்டிக்காட்டிய அன்வார், அத்திட்டத்தின் அடிப்படை விதிமுறைகளை பெரும்பாலான மலாய்க்காரர்கள் நிறைவு செய்த பட்சத்தில் அவர்கள் அத்திட்டத்தினால் பயனடைந்தனர் என்று அவர் கூறினார். “இன எல்லைகளைக் கடந்த ஏழ்மை ஒழிப்புத்திட்டத்தின் வழி உதவி தேவைப்படும் ஏழ்மையான இந்தியர்களும் பயனடைவார்கள்; மலாய்க்காரர்களின் உரிமைகளைப் பிடுங்கி யாருக்கும் உதவிகள் வழங்கப்படவில்லை!” என்று டத்தோஸ்ரீ அன்வார் மேலும் கூறினார்.

உண்மையான பொருளாதார நிலையை மக்கள் கூட்டணியின் வரவு செலவு திட்டம் முன்னிறுத்தும் என்று மேலும் பேசிய அன்வார் கூறினார். எதிர்வரும் ஆண்டில் மலேசியாவின் பொருளாதாரம் 1064 பில்லியன் ரிங்கிட்டாக இருக்கும் என ஊகிக்கப்பட்டு இவ்வரவு செலவு திட்டம் வரையப்பட்டுள்ளது. நாட்டின் பணவீக்க அளவு 3% இருக்கும் என்பதுதான் உண்மை, ஆனால் தேசிய முன்னணி அரசாங்கமோ வெறும் 1.6% மட்டுமே இருக்கும் என்று குறைத்து மதிப்பிடுகின்றது. அதைப்போலவே நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியை (GDP) 5.3 சதவீதமாக உயர்த்துவதன் வழி, வரவு செலவு திட்ட பற்றாக்குறையை 3.5 சதவீதமாக குறைக்க மக்கள் கூட்டணி கடப்பாடுக் கொண்டுள்ளது. இவ்வேளையில், இம்மாற்று வரவு செலவு திட்டம் செயல்படுத்தப்படுமானால், நாட்டின் வரவு 197 பில்லியன் ரிங்கிட்டாகவும், செலவு 234 பில்லியன் ரிங்கிட்டாகவும் இருக்கும். குறிப்பிட்ட செலவில் 185 பில்லியன் ரிங்கிட் நாட்டின் செயல்பாட்டு செலவாகவும், 49 பில்லியன் ரிங்கிட் மேம்பாட்டு செலவுகளுக்காகவும் செலவு செய்யப்படும் என்ற மக்கள் கூட்டணியின் மாற்று வரவு செலவு திட்ட அறிக்கை கூறுகின்றது.

மக்கள் கூட்டணி இவ்வரவு செலவு திட்டத்தை செயல்படுத்த மக்களுக்கு வழங்கப்பட்டு வரும் உதவித்தொகைகளில் கைவைக்காது என்று டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் கூறினார். மக்கள் கூட்டணி, ஊழல் செயல்பாடுகளையும், வீண் விரயத்தையுமே குறைக்க கடப்பாடு கொண்டுள்ளதாக அவர் தெரிவித்தார். “உதவித்தொகைகளை குறைப்பதன் மூலம், குறைந்த வருமானம் பெறுவோரை தண்டிப்பதை நாம் விரும்பவில்லை. அத்தோடு, முடிந்த அளவு எங்களது பொருளாதாரக் கொள்கைகள் வெளிப்பாட்டுத் தன்மையுடன் இருக்கும் அதே வேளையில், முடிந்த வரையில் குறைந்த, நடுத்தர வருமானம் பெறும் மக்களுக்கு உதவும் வண்ணமாகவும் அமையும்” என்று அன்வார் கூறினார்.




மக்கள் கூட்டணியின் மாற்று வரவு செலவு திட்டத்தின் முக்கிய புள்ளிகள் சில :

1)   சரவாவின் கூச்சிங்கையும், சபாவின் கோத்தா கினாபாலுவையும் இணைக்கும் ஒன்றுபட்ட போர்னியோ நெடுஞ்சாலை நிர்மாணிக்கப்படும் வேளையில், சபா, சரவாவில் தற்பொழுது உள்ள இரயில் இணைப்புகளும் மேம்படுத்தப்படும்.
(செலவு : சில பில்லியன் ரிங்கிட்)

2)   தேசிய வீடமைப்பு வாரியம் ஒன்று அமைக்கப்பட்டு, 130,000 ரிங்கிட்டிலிருந்து 300,000 ரிங்கிட் வரையிலான வாங்கக்கூடிய விலையிலான ஒரு இலட்சம் வீடுகள் நாட்டின் முக்கிய நகர்ப்புறங்களில் நிர்மாணிக்கப்படும். இவ்வீடுகள் பகுதி உரிமை (Sewa Beli) முறையில் விற்கப்படும்.
(செலவு : தொடக்க நிதியாக 5 பில்லியன் ரிங்கிட் ஒதுக்கப்பட்டு, இரண்டாம் ஆண்டிலிருந்து ஐந்தாம் ஆண்டு வரை ஒவ்வொரு வருடமும் 2 பில்லியன் ரிங்கிட் ஒதுக்கப்படும்.)

3)   கார்களுக்கான சுங்க வரியை 20% குறைத்தல்.
(செலவு : 2 பில்லியன் ரிங்கிட்)

4)   மாதாந்திர குறைந்த பட்ச ஊதியமாக 1110 ரிங்கிட்டை நிர்ணயித்தல்.
(செலவு : பொதுச்சேவை ஊழியர்களின் ஊதிய சீரமைப்புக்கு 2 பில்லியன் ரிங்கிட் செலவாகும்)

5)   வருமைக்கோட்டுக்குக் கீழே வாழும் 84 ஆயிரம் குடும்பங்களுக்கு மாதாந்திர சமூகநல உதவி தொகையாக 550 ரிங்கிட் வழங்கப்படும்.
(செலவு : 554 மில்லியன் ரிங்கிட்)

6)   நாட்டிலுள்ள 2.8 மில்லியன் மூத்த குடிமக்களுக்கு வருடாந்திர உதவிநிதியாக ஆயிரம் (1000) ரிங்கிட் வழங்கப்படும்.
(செலவு : 2.8 பில்லியன் ரிங்கிட்)

7)   12 வயதிற்கும் குறைவான பிள்ளைகளைக் கொண்டுள்ள, வருடத்திற்கு ஆயிரம் ரிங்கிட்டிற்கும் குறைவான வருமானம் பெறும் குடும்பங்களுக்கு வருடாந்திர உதவித்தொகையாக ஆயிரம் (1000) ரிங்கிட் வழங்கப்படும்.
(செலவு : கணக்கிடப்படவில்லை)

8)   குடும்பமாதர்களுக்கு ஒவ்வொரு வருடமும் 600 ரிங்கிட் உதவித்தொகையாக வழங்கப்படும். இத்தொகை அவர்தம் கணவர்கள் மாதாந்திர கட்டாய பங்களிப்பாக ஒதுக்கும் 120 ரிங்கிட்டிற்கு மேலதிகமாக வழங்கப்படும்.
(செலவு : 3 பில்லியன் ரிங்கிட்)

9)   காவல்துறையினருக்கு உயர்ந்த ஊதியம் வழங்கப்படும். குற்றத்தடுப்புக்கும், விசாரணைக்கும் அதிகமான காவலர்கள் நியமிக்கப்படுவார்கள். அதிக குற்றங்கள் நிகழும் பகுதிகளில் காவல் நிலைக்குடில்களை அமைத்தல், மற்றும் காவல்துறையின் தடவியல் திறனை மேம்படுத்துதல்.
(செலவு : 984 மில்லியன் ரிங்கிட்)
10)  உலகளாவிய இரப்பர் விலை இறக்கத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு 500 ரிங்கிட்டை உதவிநிதியாக வழங்குதல்.
(செலவு : கணக்கிடப்படவில்லை)

11)  நியாயமற்ற பொதுக்குத்தகைகள் சட்டத்தை அமல்படுத்தவதன் வழி, அரிசி, தொலைத்தொடர்புத்துறை, ஊடகத்துறை, விமான சேவை, கட்டண சேவை தொலைக்காட்சித் துறை மற்றும் வாடகைக்கார் துறைகளில் நிகழும் ஏகபோக உரிமை (monopolies) உடைக்கப்படும்.

12)  பெட்ரோல் உற்பத்தி செய்யும் மாநிலங்களான சபா, சரவாக், கிளாந்தான் மற்றும் திரங்கானு ஆகிய மாநிலங்களுக்கு 20% பெட்ரோல் உரிமைத்தொகை வழங்கப்படும்.
(செலவு : 12.5 பில்லியன் ரிங்கிட்)

13)  அரசாங்கத்திற்கு சொந்தமான இரண்டாம் நிலை பெட்ரோல் மற்றும் எரிவாயு நிறுவனம் ஒன்றை உருவாக்குதல்.

14)  இலவச பல்கலைக்கழக கல்வி அமலாக்கம். PTPTN எனப்படும் உயர்கல்வி கடன் நிறுவனம் முடக்கப்படுவதன் வழி, பின்னர் அமைக்கப்படும் ஒரு சிறப்புக்குழுவின் ஆலோசனைக்கேற்ப, குறிப்பிட்ட தகுதிக்குட்பட்ட “பெரும்பான்மை கல்வி கடனாளிகளின்” கடன் இரத்து செய்யப்படும்.
(செலவு : வருடத்திற்கு 2 பில்லியன் ரிங்கிட், 20 வருடங்களுக்கு செலவு செய்யப்படும்)

15)  மாற்றுத்திறனாளிகளுக்கு இலவச பொது போக்குவரத்து சேவை
(செலவு : 20 மில்லியன் ரிங்கிட்)

16)  பேருந்துகளின் எண்ணிக்கையை அதிகரித்தல். இதுவரை கையெழுத்திடப்பட்ட, கையெழுத்திடப்படவுள்ள எம்ஆர்டி ஒப்பந்தங்களை மறுஆய்வு செய்து, பேருந்து சேவையினை மேம்படுத்துத அதிக ஒதுக்கீடு செய்தல்.

17)  குறிப்பிட்ட கட்டண நெடுஞ்சாலைகளின் கட்டணங்களை இரத்து செய்தல். கட்டண (டோல்) சாவடிகள் அற்ற நெடுஞ்சாலைகள் அமைதல்.
(செலவு : 6 பில்லியன் ரிங்கிட்)
18)  அரசுசார் நிறுவனங்களின் நிர்வாகங்கங்களை, இக்குய்னாசின் மூலம் அரசாங்கத்தின் முழு கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருதல்.
(செலவு : கணக்கிடப்படவில்லை)

19)  சிறு, நடுத்தர தொழில் நிதியம் அமைத்தல், தேசிய புத்தாக்க நிதியம் அமைத்தல் மற்றும் வரி சலுகைகள் வழங்குதல் ஆகியவற்றின் மூலம் சிறிய, நடுத்தர தொழில்துறைகளை ஊக்குவித்தல்.
(செலவு : 1 பில்லியன் ரிங்கிட்)

நன்றி : மலேசியாக்கினி

No comments:

Post a Comment