Wednesday, May 22, 2013

தமிழ் சரித்திரம் படிப்பார்களா,தமிழ் பள்ளி மாணவர்கள்?! (republished)


தமிழர் சரித்திரம்,வழி நெடுகிலும் பற்பல சிறந்த வீரதீரங்களையும், சாதனைகளையும் கண்டது. தமிழரின் சரித்திரம் தலைச்சிறந்த சரித்திர நாயகர்களை தன்னகத்தேக் கொண்டது. அவர்களுள், மாமல்லன் என அழைக்கப்படும் முதலாம் நரசிம்ம பல்லவன், இராஜராஜன் எனப்பட்ட அருள்மொழிவர்மன், அவரின் புதல்வன் இராஜேந்திர சோழன், ஆகியோர் தமிழக வராலாற்றில் மட்டுமின்றி தமிழரின் வரலாற்றிலும் புகழ் பெற்றவர்கள். அதிலும் இராஜேந்திர சோழன் கடாரம், கம்பூச்சியம், சாவகம் என கடல் கடந்த தேசங்களில் எல்லாம் புலிக்கொடியை பறக்கவிட்டு, தமிழர் புகழ் உலக வரலாற்றிலும் நிலைத்து நிற்க செய்தவர். இதையெல்லாம் அறியும்போது ஒவ்வொரு தமிழனுக்கும் பெருமை தலைத்தூக்கும். அதேவேளையில், இராஜராஜ சோழனை பற்றியோ, இராஜேந்திர சோழனை பற்றியோ, மாமல்லனைப் பற்றியோ பேசும்பொழுது, யார் அவர்கள் என்று ஒரு தமிழன் கேட்டால், என்னவென்று சொல்வது??

ஆனால், அதுதான் உணமை.
நிகழப்போகும் உண்மை.

இன்றுள்ள நாம், கல்கியின் பார்த்திபன் கனவையோ, பொன்னியின் செல்வனையோ, அகிலனின் வேங்கையின் மைந்தனையோ படித்து விட்டு சரித்திரம் பேசலாம். ஆனால் தற்பொழுதுள்ள இளையோரிடமோ, பள்ளி மாணவர்களிடமோ பொன்னியின் செல்வன் என்று சொன்னால், கண்டிப்பாக அது தமிழ் திரைப்படம் என்று சொல்வார்களே தவிர, பொன்னியின் செல்வன் என்பது உணமையான சரித்திரத்தை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்ட நவீனம் என்பதை அறியமாட்டார்கள். இவ்வாறு சரித்திரம் மறந்த இனம் உருவாகையில் வருங்காலம் அந்த இனத்துக்கு என்ன வைத்திருக்கும்?? ஒவ்வொரு தமிழனுக்கும், தனது இனத்தின் சரித்திரம் தெரிந்திருக்க வேண்டும்.

இந்தோனேசியா, ஜாவாவில் அமைந்துள்ள பிரம்பனன் ஆலய தொகுதி

எனது பாட்டன், பூட்டன் காலத்தில் தமிழன் தமிழகத்திலிருந்து சஞ்சிக்கூலிகளாக இந்நாட்டிற்கு கொண்டு வரப்பட்டான். மலாய சுதந்திர பேச்சுகளில் வி.தி.சம்பந்தன் என்ற தமிழரும் பங்கு கொண்டார் என்று மட்டும் தெரிந்திருப்பதை விடுத்து, தமிழினத்தின் பூர்வீகம், அவனின் தொன்றுதொட்ட வரலாறு என்று அனைத்தையும் தெரிந்து வைத்திருந்தால்தான் தனித்தன்மை மிக்க தமிழன் நாளை தலைநிமிர்வான். சரித்திரத்தை மறந்த இனமும், சரித்திரத்தை மாற்றிக்கூறும் இனமும் சரித்திர சுவடே இல்லாமல் அழிந்து போகும் என்பதுதான் தின்னம்.


500-600 வருட சரித்திரப் பின்னணியைக் கொண்ட மலாயா சரித்திரத்தை அடிப்படையாகக் கொண்ட கல்வியைத்தான் நமது மாணவர்கள் ஆரம்பக்கல்வி முதற்கொண்டு மேல்நிலைப் பள்ளி வரையில் பயில்கின்றனர். மாற்றாரின் குறுகிய சரித்திரத்தை பயிலும் நம் தமிழன், நமது நெடுநீண்ட சரித்திரத்தை பயிலாமல் மறக்க விட்டது, கல்வியமைச்சில் தமிழ் பாடப்பிரிவிற்கு பொறுப்பேற்றிருக்கும் நமது இன அதிகாரிகளின் தவறா??

தமிழன் சரித்திரம் படித்தால் தலை நிமிர்ந்து விடுவான், தலை நிமிர்ந்தால் நமது பதவிக்கு ஆப்பு வந்துவிடும் என்று கண்டும் காணாமல் விட்ட சமுதாயத்தின் அரசியல் தலைவர்களின் தவறா??

தமிழ் சரித்திரம் கொண்டே தமிழரை மீண்டும் தலைநிமிர வைக்க முடியும் என்று உணராமல் விட்டுவிட்ட தமிழ் வழி இயக்கங்களின் தவறா??

யார் தவறு??

நாளை தலையெடுக்கப்போகும் நம் தமிழன், சரித்திரம் தெரிந்த, தனித்தன்மையுடைய தமிழனாக இருக்க வேண்டும் என்பதுதான் நமது அவா. அவ்வாறு ஒரு சரித்திரம் தெரிந்த தமிழினத்தை எப்படி உருவாக்குவது?? என்பதுதான் தற்போது நம்மிடம் நிலவும் கேள்வி, இந்த கேள்விக்கு ஒரே பதில், தமிழ் பள்ளிகளின் மூலம் என்பதுதான்.

தமிழ் பள்ளிகளின் பாடத்திட்டத்தில் தமிழ் வரலாறும் ஒரு பாடமாக கற்றுகொடுக்கப்பட வேண்டும். இடைநிலைப்பள்ளிகளில் தமிழ் பயிலும் மாணவர்களுக்கும் தமிழரின் வரலாறு புரியும் வண்ணம் தமிழ் பாடத்திட்டம் மாற்றியமைக்கப்படவேண்டும். உதாரணத்திற்கு, அறிஞர் மு.-வின் பாவை விளக்கு நவீனம் தற்பொழுது எஸ்.டி.பி.எம் பாடத்திட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ளது. அறிஞர் மு.-வின் சமுதாய கருத்துகள் மாணவர்களுக்கு தேவை என்பதில் மாற்றுக்கருத்து கிடையாது. ஆனால், அதே வேளையில் இன அடையாளம் அழியாமல் இருக்க வேண்டுமெனில், சரித்திரமும் முக்கியமல்லவா? ஆகவே, கல்கியின் பொன்னியின் செல்வனையோ, பார்த்திபன் கனவையோ, சிவகாமி சபதத்தையோ அல்லது மற்ற தமிழ் சரித்திர அறிஞர்களின் நவீனத்தையோ புதிதாக பாடத்திட்டத்தில் இணைத்துக் கொள்ளலாம்.

இடைநிலை, மேல்நிலை கல்வியை விட அடிப்படைக்கல்வியான ஆரம்ப பள்ளி பாடத்திட்டத்திலேயே தமிழ் சரித்திரம் சேர்க்கப்பட்டால்தான்,மிக சிறப்பாக அமையும்.

"தமிழ்ப்பள்ளியில் தமிழர் சரித்திரம்"
சாத்தியமா??
எப்படி நடைமுறைக்கு கொண்டு வருவது??
யார் பொறுப்பேற்பது??

P.S

This article I wrote 5 years, back in 2008. After listening to Prof Ramasamy's speech in a function yesterday, wanted to republish again.

இந்த பதிவை 5 வருடங்களுக்கு முன்பு நான் பதிவிட்டிருந்தேன். நேற்று ஒரு நிகழ்வில், பினாங்கு துணை முதல்வர் பேராசிரியர் இராமசாமி, "நமது பிள்ளைகளுக்கு நமது சரித்திரம் இப்பொழுது எங்கே தெரிகின்றது?!" என்று பேசினார். அதனால், இதனை மறுப்பதிவு செய்தல் அவசியம் என கருதுகின்றேன்.