Saturday, January 11, 2014

பத்துமலை முருகனை நடராஜா கூட்டத்திடமிருந்து காப்பாற்றுங்கள் - இந்து அறப்பணி வாரிய சட்டம் இயற்றுங்கள்; சிலாங்கூர் அரசாங்கத்திற்கு சத்தீஸ் முனியாண்டி அறைகூவல்

இந்நாட்டில் உள்ள திருமுருக பக்தர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கும் வண்ணம் பத்துமலை முருகனை நடராஜாவின் கூட்டத்தினரிடமிருந்து காப்பாற்ற வேண்டியது சிலாங்கூர் அரசின் கடமையாகும். ஆகவே, உடனடியாக சிலாங்கூர் இந்து அறப்பணி வாரியம் அமைத்து, பத்துமலை முருகன் ஆலயத்தை அவ்வாரியத்தின் கீழ் கொண்டுவர நடவடிக்கைகளை எடுக்க சிலாங்கூர் மாநில மக்கள் கூட்டணி அரசாங்கம் முன்வர வேண்டும் என்று ஜசெக சோசலிச இளைஞர் பிரிவின் தேசிய கல்வி மேம்பாட்டு பிரிவு தலைவர் சத்தீஸ் முனியாண்டி அறைகூவல் விடுத்தார்.

இவ்வாண்டு தைப்பூசத்தில் எப்படி நடந்துக்கொள்ள வேண்டும் என்று மலேசிய இந்து சங்கம் அண்மையில் வெளியிட்ட வழிகாட்டியை மிகவும் நிராகரித்து கோலாலம்பூர்  மாரியம்மன் ஆலய தலைவர் டான்ஸ்ரீ நடராஜா விடுத்துள்ள அறிக்கையானது, பத்துமலை முருகன் ஆலயத்தை ஒரு குறிப்பட்ட சில தரப்பினரடமிருந்து மீட்டெடுக்க வேண்டியது எவ்வளவு அவசியம் என்பதை நமக்கு உணர்த்துகின்றது. முருகன் என்றுமே தமிழ்க்கடவுள்; மதங்களுக்கு அப்பாற்பட்ட கடவுளாம் முருகப்பெருமான், தமிழர் இருக்குமிடமெல்லாம் அவர் நிறைந்திருப்பார். தமிழரின் அடையாளமாக என்றும் திகழும் முருகப்பெருமான், தமிழருக்கெல்லாம் சொந்தமானவர். ஆனால், டான்ஸ்ரீ நடராஜாவின் அறிக்கையைக் காண்கையில், பத்துமலை முருகனும், தைப்பூசமும் இவருக்கும், இவர் கூட்டத்தினருக்கும் சொந்தம் என்பதைப் போல உள்ளது.

தைப்பூசத்திற்கு வழிகாட்டி வெளியிட மலேசிய இந்து சங்கத்திற்கு எந்தவொரு அதிகாரமும் இல்லையென்ற பொழுதிலும், தைப்பூசத் திருநாளின் மாண்பைக் குறைக்கும் நடவடிக்கைகளை தடுக்கும் வண்ணம் வழிகாட்டி வெளியிட்டதில் என்ன தவறு இருக்கின்றது என்று நடராஜா காட்டமாக எச்சரிக்கை விடுத்திருக்கின்றார்?தமிழரின் மாண்புமிக்க திருநாள்களில் ஒன்றான தைப்பூசத் திருநாளில் ஒரு சிலரின் தமிழர் சமயத்துக்கு புறம்பான, அத்துமீறிய நடவடிக்கைகளைப் பார்த்து அன்னிய இனத்தினர் எள்ளி நகையாடுவதுதான் டான்ஸ்ரீ நடராஜாவிற்கு விருப்பமா?!

மலேசிய இந்து சமயத்தின் நடவடிக்கைகள் அனைத்தையும் ஆதரிக்கவில்லை என்றாலும், இதுப்போன்ற ஒரு சில நல்ல காரியங்களுக்கு எதிர்ப்புத் தெரிவிக்காமல் இருத்தலே மிகப்பெரிய உதவியாகும்.

நடராஜா போன்ற தனிநபர் மற்றும் குறிப்பிட்ட ஒரு சிலரின் ஆதிக்கத்திலிருந்து பத்துமலை முருகன் திருத்தலத்தை மீட்டெடுக்கும் வண்ணம், சிலாங்கூர் மாநில மக்கள் கூட்டணி அரசு உடனடியாக இந்து அறப்பணி வாரிய சட்டம் இயற்ற நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். சிலாங்கூர் மாநில அரசு அவ்வாறு நடவடிக்கைகள் எடுக்கும் பட்சத்தில், இந்து சங்கம் உட்பட சமுதாய நலன் பேணும் அனைத்து சமூக இயக்கங்களும் ஆதரவளிக்க வேண்டுமென, சத்தீஸ் தனது அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளார்.