Sunday, June 26, 2011

அவன் இவன் - என் விமர்சனம் (Avan Ivan - My Review)


வெகு நாட்களுக்கு பிறகு, தனியாக திரையரங்குக்கு சென்று ஒரு படம் பார்த்தேன். அவன் இவன் என்ற தலைப்பை விட, அத்திரைப்படத்தை இயக்கியவர் பாலா என்பதுதான் என்னை ஈர்த்தது. முதல் படமான "சேது" விலேயெ ஒட்டு மொத்த தமிழ் சினிமாவையும் தன் பக்கம் திரும்பிப் பார்க்க வைத்தவர் இந்த பாலா. அவரின் இரண்டாவது படமான "நந்தா"வில் தனது கதாநாயகியை ஈழத்தில் இருந்து வந்த ஒரு அகதியாய் காட்டியிருந்தார். தேசிய விருது பெரும் திறமைகளையுடைய விக்ரம் என்ற தமிழ் நடிகனை அடையாளம் காட்டியவர் இந்த பாலா.

ஒரு சாதாரண தமிழனின் வாழ்க்கையை அச்சு அசலாக படம் பிடித்து நம் கண் முன் காட்டுவதில், பாலாவிற்கு தனித்திறமை உள்ளது. ஒரு மனிதனின் வாழ்க்கையை மிக இயல்பாக காட்டும் திறமையுடையவர். பல நேரங்களில் அதுப்போன்ற காட்சிகள் நகைச்சுவையாக அமைந்தாலும், போலியாக இருப்பதில்லை. அதுதான் பாலா என்ற தமிழ் இயக்குனரின் சிறப்பு. அவர் இயக்கிய "அவன் இவன்" என்ற திரைப்படத்தை பார்க்க சென்று, சிறிதும் ஏமாற்றமில்லாமல் திரும்பினேன்.

மிக நேர்த்தியான கதையமைப்பு, இயல்பான நடிப்பை வழங்கும் நடிகர்கள், நகைச்சுவையாக நகரும் கதை, அனைத்தும் மிகச்சிறப்பாக அமைந்துள்ளது. நெடுநாட்களுக்கு பிறகு நான் அதிகம் சிரித்தது இன்றுதான். ஏறக்குறைய சுமார் ஒன்றரை மணி நேரமாவது நான் சிரித்திருப்பேன். நான் மட்டுமல்ல ஒட்டு மொத்த திரையரங்கமே சிரித்தது. அவ்வளவு இயல்பான நகைச்சுவை. கடைசி அரைமணி நேரத்தில்தான் கதையே உள்ளது. இருப்பினும், எந்தவொரு சலிப்புமில்லாமல் படம் நகர்கிறது. ஒரு பொழுதுபோக்கு படமாக பாலா இதனை படைத்துள்ளது ஆச்சரியத்தையளித்தாலும், இது பாலா படம் என்பதற்கான முத்திரைகளை அங்காங்கே இழையோட வைத்துள்ளார்.

இப்படத்தில் குறிப்பாக ஒரு காட்சி, இந்திய அரசின் இரட்டை வேடத்தை தோலுரித்துக் காட்டுவதாக அமைந்துள்ளது. அந்த காட்சிக்காகவே, இப்படத்தை மேலும் ஒரு முறை பார்க்கலாம் என்றெண்ணியுள்ளேன். படத்தில் ஒரு காட்சியில், ஒரு கல்லுரியின் விரிவுரையாளர் ஒரு கேள்வி கேட்கிறார் :

விரிவுரையாளர் : இரண்டாவது மகாத்மா என்று அழைக்கப்படுபவர் யார்?
A) நெல்சன் மண்டேலா
B) மகிந்தா இராஜபக்சே

இந்த கட்டத்தில், படத்தின் நாயகர்களில் ஒருவரான ஆர்யா, தனது ருபாயை சுண்டி விடுகிறார்.

விரிவுரையாளர் : என்ன செய்கிறாய்?
நாயகன் : ருபாயை சுண்டி விட்டு விடை தேடுகிறேன். பூ விழுந்தால் மண்டேலா; தலை விழுந்தால் இராஜபக்சே!!
விரிவுரையாளர் : என்ன விழுந்தது?
நாயகன் : பூ விழுந்தது; மண்டேலா!
விரிவுரையாளர் : கோடான கோடி நன்றி யேசப்பா (கடவுளே)... கோடான கோடி நன்றி!!

போர்க்குற்றவாளி ராஜாபக்சேவை, மகாத்மா அளவுக்கு இந்திய அரசாங்கம் அரவணைத்தாலும் ஆச்சரியமில்லை என்பதை மிக நாசுக்காக, ஒரே காட்சியில் சொல்லியுள்ளார் பாலா. அதற்காகவே இப்படத்தை பார்க்கலாம் என்பது எனது கருத்து.

பாலாவின் பல சீரியசான படங்களைப் பார்த்து விட்டு, ஒரு நகைச்சுவை நிறைந்த சீரியஸ் படத்தைப் பார்க்க விரும்புபவர்கள் தாராளமாக திரையரங்குக்கு செல்லலாம்.

படத்தில் வரும் கதாப்பாத்திரங்கள் (நாயகிகளைத் தவிர) அனைவருமே குடிக்கிறார்களே என்று ஒரு சிலர் முனுமுனுக்கலாம். மது குடிப்பதை அளவுக்கதிகமாகக் காட்டியுள்ளார் என்று சிலர் குறைக்கூறலாம். "ஆனால் உள்ளதைத்தானே திரையில் காட்டியுள்ளார்" என்பது எனது வாதம். தமிழன் என்ன குடிக்காத உத்தமனா? தமிழகத்தில் தமிழன் குடிப்பதைக் கண்டு, மது வியாபரம் இலாபமானது என்று அரசாங்கமே மதுக்கடைகளை நடத்துகிறது. மலேசியாவில், 24 மணி நேரமும் மலிவு சம்சுகளை விற்கும் கடைகளுக்கு வாடிக்கையாளன் தமிழன் தானே?

அனைத்து தமிழர்களும் குடிக்காரர்கள் இல்லையே என்பது ஏற்றுக்கொள்ளக் கூடிய வாதம்தான்; இருப்பினும், சாமான்ய தமிழன் இன்றும் குடியில்தான் தங்கள் பொழுதைப் போக்குகிறார்கள் என்ற கசப்பான உண்மையை ஏற்றுக்கொள்வோமே?

My Review :

Avan Ivan - Another Blockbuster attempt by Director Bala of Sethu fame. Director Bala, is the one who unleashed a multi talented actor who won the National Award, Vikram. I wanted to watch this movie because, it is Bala's movie. I was not disappointed.

It was a great entertainment. And i laughed a lot, after many days. Bala is specialist, when it comes to potray a common Tamil's lifestyle.

1 comment: