Sunday, July 15, 2012

பினாங்கு மாநில மக்கள் கூட்டணி அரசின் சாதனைகள் - பாகம் 1

அரசியல் அங்கீகாரம்

08 மார்ச் 2008
தேசிய முன்னணி காலத்தில், வெறும் இரு இந்தியர்களுகள் மட்டுமே சட்டமன்ற உறுப்பினரகளாக இருந்தனர். 2004க்கு முன்பு அதுவும் ஒன்றாக மட்டுமே இருந்தது. அது பிறை சட்டமன்ற தொகுதி மட்டுமே. 2008 பொதுத்தேர்தலிலும், பாரிசான் வெறும் இரு இந்தியர்களுக்கு மட்டுமே, சட்டமன்றத்திற்கு போட்டியிட வாய்ப்பளித்தது. ஆனால், மக்கள் கூட்டணியோ, மொத்தம் 5 சட்டமன்ற தொகுதிகளில் இந்தியர்களுக்கு போட்டியிட வாய்ப்பளித்ததோடு, இரு நாடாளுமன்ற தொகுதிகளிலும் இந்தியர்களுக்கு போட்டியிட வழங்கியது.

2008 தேர்தலின் அரசியல் எதார்த்தம்

சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள்
இதில் பிறை, பாகான் டாலாம், டத்தோ கிராமாட், ஸ்ரீ டெலிமா ஆகிய நான்கு சட்டமன்ற தொகுதிகளில் ஜசெக (DAP) இந்திய உறுப்பினர்களும், பத்து உபான் தொகுதியில் மக்கள் நீதிக்கட்சியின் (PKR) வேட்பாளரும் போட்டியிட்டனர். புக்கிட் குளுகோர் மற்றும் பத்து கவான் ஆகிய நாடாளுமன்ற தொகுதிகளில் ஜசெகவின் கர்ப்பால் சிங் மற்றும் பேராசிரியர் இராமசாமி ஆகியோர் வேட்பாளர்களாக நின்றனர்.

மேற்குறிப்பிட்ட 5 சட்டமன்ற, 2 நாடாளுமன்ற தொகுதிகளிலும் மக்கள் கூட்டணி அபார வெற்றிப்பெற்றதால், பினாங்கு மாநில அரசியலில் இந்தியர்களின் குரல் வலுப்பெற்றது என்பது மறுக்க முடியாத உண்மை. பொதுத்தேர்தலுக்கு முன்பே, பினாங்கு இந்தியர்களுக்கு தகுந்த அரசியல் அங்கீகாரத்தை வழங்கியது மக்கள் கூட்டணிதான்!!

(இடமிருந்து) அ.தனசேகரன், ஜக்டீப் சிங், நேதாஜி இராயர், பேராசிரியர் இராமசாமி, எஸ்.இரவிந்திரன்

துணை முதல்வர் பதவி
மலேசியாவின் வரலாற்றிலேயே, ஒரு மாநிலத்தின் மிக உயரிய பதவியான துணை முதல்வர் பதவியை ஒரு தமிழரான பேராசிரியர் இராமசாமி பெற்றது, பினாங்கு இந்தியர்கள் மட்டுமின்றி, மலேசியாவில் உள்ள மொத்த இந்தியர்களுக்கும் பெருமை சேர்த்தது.

வெறும் தமிழர் என்பதற்காக் மட்டும் அவருக்கு அந்த பதவி கிடைக்கவில்லை. அவரின் அறிவுக்கூர்மையும், ஆற்றலும் அதற்கு பெரும் காரணங்கள். அந்த பதவிக்கு அவர் முற்றிலும் தகுதியுள்ளவர் என்பதில் மாற்றுக்கருத்தில்லை. பாரிசான் உறுப்பு கட்சியான மஇகாக்கூட அதனை ஏற்றுக்கொண்டது. மஇகாவின் முன்னாள் தலைவர் சாமிவேலுவே இதனைக் கூறியிருந்தார். தகுதி உள்ள இந்தியர்கள் நிச்சயம் மக்கள் கூட்டணி ஆட்சியில் புறக்கணிக்கப்பட மாட்டார்கள் என்பதை உணர்த்திய வரலாற்றுபூர்வ சம்பவம் இது.

பினாங்கு மற்றும் செபராங் பிறை நகராண்மைக் கழகங்கள்

நகராண்மைக்கழக உறுப்பினர்கள்
2008க்கு முன்பு, பினாங்கு மற்றும் செபராங் பிறை நகராண்மைக் கழகங்களில், தலா இரண்டு இந்தியர்களே உறுப்பினர்களாக இருந்தனர். 2008 மக்கள் கூட்டணி ஆட்சியமைத்ததற்கு பிறகு, செபராங் பிறை நகராண்மைக் கழகத்தில் நான்கு இந்தியர்களும், பினாங்கு நகராண்மைக் கழகத்தில் மூன்று இந்தியர்களும் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டனர். பாரிசான் காலத்தில், இந்திய நகராண்மைக்கழக உறுப்பினர்கள் வெறும் பெயருக்கு பதவியை அலங்கரித்தனர்; ஆனால் இன்று, நகராண்மைக்கழகத்தின் அடிப்படை கொள்கை வரைவுகளில் இந்திய உறுப்பினர்களின் பங்களிப்பு மிகவும் முக்கியமாக இருக்கின்றது.

வட்டார பாதுகாப்பு, மேம்பாட்டுக் குழு (JKKK) தலைவர்கள் 
2008க்கு முன்பு, பாரிசான் ஆட்சியில் பினாங்கு மாநிலத்தில் வெறும் ஒரேயொருவர் மட்டும்தான் JKKK எனப்படும் வட்டார மேம்பாட்டு பாதுகாப்பு குழுவிற்கு தலைமையேற்றிருந்தார். இந்தியர்கள் கிள்ளுக்கீரையாக நடத்தப்பட்டது அந்த காலம்.

மக்கள் கூட்டணி ஆட்சியமைத்த பிறகு, இன்று சுமார் 10க்கும் மேற்பட்ட வட்டார மேம்பாட்டு, பாதுகாப்பு குழுக்களுக்கு (JKKK) இந்தியர்கள் தலைமையேற்றுள்ளனர். பெரும்பாலும் இந்தியர்கள் வாழும் பகுதிகளில் இந்தியர்களே தலைவர்களாக உள்ளனர். மாநில அரசாங்கத்தின் அனைத்து நிலைகளிலும் இந்தியர்கள் இன்று மதிக்கப்படுகின்றனர். இதுதான் உண்மை!!!

கருத்து
முன்பு பினாங்கு மாநிலத்தில் ஆட்சியில் இருந்த பாரிசான் அரசாங்கம், இந்தியர்களை மதிக்காததோடு, அரசியல் அங்கீகாரத்தையும் வழங்கவில்லை. ஆனால், மக்கள் கூட்டணியோ, தேர்தலுக்கு முன்பு தொடங்கி, பொதுத்தேர்தல் முடிந்து மாநிலத்தில் ஆட்சியமைத்த பின்னும், இந்தியர்களை அரசியல்பூர்வமாக அங்கீகரித்துள்ளது. பினாங்கு மாநிலத்தில், இந்தியர்களை மக்கள் கூட்டணி அரசு அரசியல்பூர்வமாக அங்கீகரித்ததை கடந்த நான்கு வருட ஆட்சியில் கண்கூடாகக் காண முடிந்தது.

- தொடரும் -

*பின்குறிப்பு

முதலில், பினாங்கு மாநில மக்கள் கூட்டணி அரசானது, கடந்த 2008ஆம் ஆண்டு தொடங்கி, இனம், மதம் அரசியல் வேறுபாடுகளை முன்னிறுத்தாமல், அனைத்து மலேசியர்களுக்குமான அரசாங்கமாக ஆட்சியில் இருந்து வருகின்றது. இருப்பினும், தேசிய முன்னணியில் (பாரிசான் நேஷனல்) உள்ள சிலர், பினாங்கு மாநில அரசாங்கம் குறிப்பிட இனத்தை பின் தள்ளுவதாக அடிக்கடி குற்றஞ்சாட்டி வருகின்றனர். அண்மையில், வரும் பொதுத்தேர்தலில், பாரிசானின் வேட்பாளராக கனவுக் கண்டுகொண்டிருக்கும் மஇகாவின் இளைய தலைவர் ஒருவர், அதைப்போன்ற குற்றசாட்டுகளை மாநில மக்கள் கூட்டணி அரசுக்கு எதிராக அடுக்கியிருந்தார். சில பகுதிகளாக வெளிவரவிருக்கும் எனது இக்கட்டுரை, அவ்வாறான குற்றச்சாட்டுகளுக்கு பதிலளிக்கும் நோக்கத்திலேயே வெளியிடப்படுகின்றது. ஆகவே, இக்கட்டுரைகள், ஒரு இனத்தை முன்னிறுத்தி எழுதப்பட்டுள்ளது என்று பாராமல், பாரிசானின் பொய்களை முறியடிக்கும் ஒரு முயற்சியாக பார்க்க வேண்டும்.

மற்றும், பினாங்கு மாநில மக்கள் கூட்டணி அரசின் சாதனைகளை விளக்கும் இவ்வாறான கட்டுரைகளை, அதிகாரப்பூர்வ மாநில இதழில் உங்களால் காணவோ, படிக்கவோ இயலாது. காரணம், "நடுநிலையாளர்கள்" மற்றும் "சுயபுராணம் பாடும் சமூக ஊடக ஹீரோக்களுக்குத்தான்" கண்டதையும் எழுத அங்கு வாய்ப்பு வழங்கப்படும்.

No comments:

Post a Comment