Monday, February 27, 2012

ஜெனிவாவில் நடைபெறும் ஐநா மனித உரிமைகள் சபையின் 19வது கூட்டத்தொடரில் இலங்கைக்கு எதிராக கொண்டுவரப்படும் தீர்மானத்தை மலேசியா ஆதரிக்க வேண்டும்!!

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபையின் 19வது கூட்டத்தொடர், பிப்ரவரி 27 தொடங்கி மார்ச் 23 தேதி வரை நடைபெறுகின்றது. ஐநா மனித உரிமைகள் சபையின் உறுப்பினர் என்ற வகையில், மலேசியாவும் இந்த கூட்டத்தொடரில் கலந்துக்கொள்கிறது. மலேசிய வெளியுறவுத்துறை அமைச்சர் அனிஃபா அமான், மலேசிய குழுவிற்கு தலைமையேற்றுள்ளார். 27ஆம் தேதி நடைபெறும் உச்சநிலைக் கூட்டத்தில் அனிஃபா அமான் உரையாற்றுகிறார்..

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபை

அனைத்துலக மனித உரிமை பிரகடனத்திற்கு கட்டுப்படும் நாடு என்ற வகையிலும், வியென்னா பிரகடனம், பெய்ஜிங் பிரகடனம், கோப்பன்ஹேகன் பிரகடனம் மற்றும் கேய்ரோ பிரகடனம் ஆகியவற்றை மதித்து நடப்போம் என்று ஐக்கிய நாடுகள் சபைக்கு உறுதி வழங்கியுள்ள நாடு என்ற வகையிலும், 2009ஆம் ஆண்டு, தமிழீழ விடுதலைப்புலிகளுக்கும், இலங்கைக்கும் இடையில் நடந்த கடும் போரில், போர்க்குற்றங்கள், அப்பட்டமான மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டதற்காக இலங்கைக்கு எதிராக கொண்டுவரப்படும் எந்தவொரு தீர்மானத்திற்கும் மலேசிய ஆதரவு அளிக்க வேண்டும்.

இலங்கை அரசாங்கத்தால் திட்டமிட்டு அரங்கேற்றப்பட்ட தமிழின அழிப்பு

தற்பொழுது நடைபெறும் 19வது கூட்டத்தொடரில், இலங்கையில் நடைபெற்ற போரில் பல்லாயிரக்கணக்காண அப்பாவி தமிழர்கள் கொல்லப்பட்டதற்கு இலங்கை அரசு பொறுப்பேற்க வேண்டும் என்றும், முறையாக மறுநிர்மாணிப்பு பணிகளை மேற்கொள்ளுமாறும் வலியுறுத்தி அமெரிக்கா தீர்மானம் ஒன்றை தாக்கல் செய்யவிருப்பதாகத் தெரிகின்றது. இலங்கையில் அரசாங்க துருப்புகளுக்கும், விடுதலைப்புலிகளுக்கும் இடையில் நடைபெற்ற போரில் இறுதி நாட்களில், ஆயுதமேந்தா பெண்கள், குழந்தைகள் உட்பட பல்லாயிரக்கணக்கான அப்பாவி தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டனர். ஐநா செயலாளர் நாயகம், பான் கீ மூனால் அமைக்கப்பட்ட சிறப்பு நிபுணர் குழுவும் இலங்கையில் நடந்த போரில் இரு தரப்பும் போர்க்குற்றங்களில் ஈடுபட்டதாக உறுதி செய்துள்ளது. மேலும், பல்லாயிரக்கணக்கான அப்பாவி பொதுமக்கள் கொல்லப்பட்டதற்குக் காரணம், பாதுகாப்பு வலயத்துக்குள் இலங்கை படைகள் நடத்திய தாக்குதல்தான் என்று அந்நிபுணர் குழுவின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இலங்கை வான்படை, மருத்துவமனைகள் என்று தெரிந்தும் பல மருத்துவமனைகளையும் தாக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது. பொதுவாக, போர் நடக்கும் பகுதியில் உள்ள மருத்துவமனைகள் உட்பட பாதுகாக்கப்பட்ட பகுதிகளின் குறியீடுகள் பாதுகாப்பு படைகளின் தலைமையகத்திற்கு அனைத்துலக செஞ்சிலுவை சங்கத்தினால் வழங்கப்பட்டிருக்கும். அப்படியிருந்தும் பொதுமக்களை இலக்காக கொண்டு தாக்குதல் நடத்தியுள்ள இலங்கைப் படைகளின் நடவடிக்கை வெறும் போர்க்குற்றம் மட்டுமல்ல; இலங்கையில் உள்ள சிறுபான்மை தமிழர்களுக்கு எதிராக திட்டமிட்டு நடத்தப்பட்ட இன அழிப்பு நடவடிக்கையும் ஆகும்.

அகதிகள் முகாமென்று கூறப்படும், முள்வேளி முகாம்களுக்குள் அடைந்து கிடக்கும் பல்லாயிரக்கணக்கான தமிழர்கள்

இலங்கையில் போர் முடிவுக்கு வந்து, சுமார் மூன்று ஆண்டுகள் ஆகின்ற நிலையிலும், அந்த தீவு நாட்டின் வடக்கு கிழக்கு பகுதிகளில் உள்ள தமிழர்கள், இன்றும் பல்வேறு துன்பங்களை அனுபவிக்கின்றனர். தமிழர்களில் பலர், இன்றும் அடிப்படை வசதிகளற்ற அகதிகள் முகாம்களில் தங்கியுள்ளனர். தங்கள் சொந்த நாட்டிலேயே, முள்வேலி முகாம்களுக்குள் இத்தமிழர்கள் அகதிகளாக வாழ்வது மிகவும் கவலைக்குரியதாகும். இலங்கை அரசுக்கு, தமிழர்கள் குறித்த எந்தவொரு அக்கறையுமில்லை, அதனால்தான் மறுநிர்மாணிப்பு பணிகள், ஆமை வேகத்தில் மிக தாமதமாக நடைபெறுகின்றன. மிக, மிக தாமதாக மறுநிர்மாணிப்பு பணிகளை மேற்கொள்ளும் இலங்கை அரசின் நடவடிக்கையானது, போருக்கு பிறகு, விடுதலைப்புலிகள் இல்லாத சமயத்தில், தமிழர்கள் குறித்த விடயத்தில், இலங்கை அரசு நேர்மையாகவும், ஈடுபாட்டோடும் நடந்துக்கொள்ளவில்லை என்பது மிக தெளிவாக தெரிகின்றது.

மலேசியாவின் முதல் பிரதமரான துங்குவின் காலம் தொட்டு, மனித உரிமைகள் விவகாரத்தில் மலேசியா உறுதியான நிலைப்பாட்டைக் கொண்டுள்ளது. துங்கு பிரதமராக இருந்தபொழுதுதான், தென்னாப்பிரிக்கா அரசாங்கத்தின் "அபர்தேய்ட்" இனவாதத்திற்கு எதிராக தென்னாப்பிரிக்காவை புறக்கணிக்கும் நடவடிக்கையை மலேசியா எடுத்தது.சுதந்திர பாலஸ்தீனத்தை ஆதரிக்கும் நமது நிலைபாட்டின் காரணமாக, இன்றுவரை, இனவாத சியோனிச இஸ்ரேல் அரசாங்கத்தோடு எந்தவொரு அரசதந்திர உறவுகளையும் மலேசியா வைத்திருக்கவில்லை. ஆனால், இலங்கை விவகாரத்தில் மட்டும் மலேசியா கண்களை மூடிக்கொள்கின்றது. அனைத்துலக மனித உரிமை விவகாரங்களின், மலேசியாவின் இரட்டை நிலைப்பாடு வருத்தத்திற்குரியது.

இலங்கை இனவாத அரசாங்கத்திற்கு நாடாளுமன்றத்தில் ஆதரவு தெரிவிக்கும் மலேசிய வெளியுறவுத்துறை அமைச்சர்


2009ஆம் ஆண்டு தொடக்கத்தில் (இலங்கை போர் கசப்பான முடிவை எட்டுவதற்கு முன்) காசாவின் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களை கண்டித்து கூட்டப்பட்ட சிறப்பு நாடாளுமன்ற கூட்டத்தில், பத்து காவான் நாடாளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் இராமசாமி, இலங்கையில் நடக்கும் மனித அவலங்கள் குறித்து கவலை தெரிவித்ததோடு, இதைப்போலவே இலங்கை விவகாரத்தை விவாதிக்க சிறப்பு நாடாளுமன்ற கூட்டத்தொடர் ஒன்றை நடத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார். அப்பொழுது வெளியுறவுத்துறை அமைச்சராக இருந்த டத்தோஸ்ரீ உத்தாமா இராய்ஸ் யாத்தீம், அது குறித்து கண்டிப்பாக பரிசீலிப்பதாகக் கூறினார். அதற்கு பிறகு அது குறித்து எந்தவொரு சத்தமுமில்லை. 2009 இறுதியில், இலங்கையில் நடந்த போர் ஒரு கசப்பான முடிவை எட்டிய பிறகு, பேராசிரியர் இராமசாமியின் கேள்வி ஒன்றுக்கு பதிலளித்த வெளியுறவுத்துறை அமைச்சர் அ. கோகிலன் பிள்ளை, இலங்கை அரசாங்கத்தின் மனித உரிமை அத்துமீறல்களை கண்டிக்க மறுத்ததோடு மட்டுமல்லாமல், தனது சொந்த குடிமக்களையே கொன்று குவித்த இனவாத இலங்கை அரசை மலேசிய நாடாளுமன்றத்தில் பாராட்டியும் பேசினார். அதேவேளை, இலங்கையில் போரினால் பாதிக்கப்பட்ட பொதுமக்களை 2010 ஜனவரிக்குள் அவர்களின் சொந்த இடங்களில் மறுகுடியேற்றம் செய்வதாக ஐநா செயலாளர் நாயகம் பான் கீ மூனிடம் இலங்கை உறுதியளித்திருப்பதாக நாடாளுமன்றத்தில் கோகிலன் கூறினார். ஆனால், இன்றுவரை இலங்கை சொன்னதை செய்யவில்லை. ஆனால், இன்றும் மலேசியாவின் நிலைப்பாடு இலங்கைக்கு ஆதரவானதாகவே உள்ளது. இது, வாழும் ஹிட்லரான மகிந்த இராஜபாக்சேவின் இனவாத அரசாங்கத்திற்கு தேசிய முன்னணி அரசாங்கம் வழங்கும் ஆதரவையும், மலேசிய அரசாங்கத்தின் கபட நாடகத்தையும் வெளிப்படுத்துவதாக உள்ளது.

அனைத்துலக மனித உரிமை பிரகடனத்தை மதிப்பதாக கூறிய பொழுதிலும், அனைத்துலக மனித உரிமை விவகாரங்களில் மலேசியா இரட்டை வேட கபட நாடகம் ஆடுகின்றது. கடந்த 2011 செப்டம்பர் மாதம் நடைபெற்ற ஐநா மனித உரிமைகள் சபையின் 18வது கூட்டத்தொடரில், இலங்கை அரசாங்கத்தை கண்டிக்கும் தீர்மானம் ஒன்றை, கனடிய பிரதிநிதி முன்மொழிந்தார். இலங்கையில் நடந்த மனித படுகொலைகளுக்கு பொறுப்பேற்குமாறும், மனித உரிமைகள் விவகாரத்தில் உண்மையாக நடந்துக்கொள்ளுமாறும் இலங்கையை வற்புறுத்திய அந்த தீர்மானத்தை, பாகிஸ்தான் தலைவர் கூற்றறிக்கையின் வழி, இலங்கை அரசை பாராட்டும் தீர்மானமாக வாசித்து, மீட்டுக்கொள்ளவும் செய்தது. இலங்கை அரசாங்கம் அடிப்படை மனித உரிமைகளை கையாளும் விதம் தெரிந்திருந்தும், அக்கண்டன தீர்மானம், பாராட்டு தீர்மானமாக வாசிக்கப்பட்டு மீட்டுக்கொள்ளப்பட்டது. இதில் கவலைக்குரிய விடயம் என்னவென்றால், "மனித உரிமைகள் பாதுகாவலனாக" அனைத்துலக அரங்கில் தன்னைக் காட்டிக்கொள்ளும் மலேசியாவும் அந்த தீர்மானத்தை மீட்டுக்கொள்ள ஆதரவளித்துதான். மலேசிய அராசாங்கத்தின் இரட்டை வேட கபட நாடகத்தின் உச்சம் இதுவென்று கூறலாம்.

வாழும் ஹிட்லர் மகிந்தாவோடு ஒத்து போகின்றதா மலேசிய அரசு?

இருப்பினும், தனது கடந்த கால தவறுகளை மீட்டுக்கொள்ள மலேசியாவிற்கு மீண்டுமொரு அரிய வாய்ப்பு அமைந்துள்ளது. இன்று தொடங்கி நடைபெறவிருக்கும் ஐநா மனித உரிமைகள் சபையின் 19வது கூட்டத்தொடரில், இலங்கைக்கு எதிராக கொண்டுவரப்படும் எந்தவொரு தீர்மானத்தையும் ம்லேசியா ஆதரிக்க வேண்டும். அதன்வழி, இலங்கையில் நடைபெற்ற போர்க்குற்றங்களுக்கு இலங்கை அரசாங்கத்தை பொறுப்பேற்க வைக்க முடியும். அதனூடாக, இலங்கையில் அகதிகள் முகாம்களில் வாழும் தமிழர்களுக்கு ஒரு நேர்மையான மறுகுடியேற்றங்களை ஏற்படுத்த இலங்கை அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுக்க முடியும். இதன்வழி, அரை நூற்றாண்டுகளுக்கும் மேலாக அத்தீவு நாட்டில் நடைபெற்றுவரும் இனப்பிரச்சனைக்கு சுமூகமான ஒரு தீர்வு பிறக்கவும் வாய்ப்பை ஏற்படுத்த முடியும். இவ்விவகாரத்தில் மலேசிய அரசாங்கத்தின் நடவடிக்கைகளை, மலேசியாவில் வாழும் தமிழர்கள் உன்னிப்பாக கவனித்து வருகிறார்கள் என்பதை மலேசிய அரசாங்கம் உணர வேண்டும். மலேசிய அரசாங்கத்தின் முடிவு மலேசிய தமிழர்களின் உணர்வுகளையும் பாதிக்கும் என்பதை, அரசாங்கம் உணர வேண்டும்.

ஆகவே, ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபையின் கொண்டுவரப்படவுள்ள அத்தீர்மானத்தை எதிர்க்க வேண்டாம் என்று, மலேசிய வெளியுறவுத்துறை அமைச்சருக்கு, மலேசிய பிரதமர் டத்தோஸ்ரீ நஜீப் ராசாக் அறிவுறுத்த வேண்டும். அமெரிக்காவினால் கொண்டுவரப்படலாம் என்று எதிர்பார்க்கப்படும் அத்தீர்மானத்தின் வாக்கெடுப்பின் போது எந்தவொரு தவறும் நிகழ்ந்து விடாமல் இருக்க, அந்த நிலைபாட்டை, ஐநாவிற்கான மலேசியாவின் நிரந்தர பிரதிநிதிக்கும் உடனடியாக தெரியப்படுத்த வேண்டும். இது மனித இனத்தின் அடிப்படை உரிமைகளை சம்பந்தப்படுத்திய விவகாரம் என்பதால், அத்தீர்மானத்தை, அமெரிக்காவோடு இணை ஆதரவாளராக கொண்டு வரவும் மலேசிய முன்வர வேண்டும்.

No comments:

Post a Comment